Monday, November 19, 2012


A TALE OF TWIST
(முக்கிய குறிப்பு : கட்டுரையில் ஆங்காங்கே காணொளி இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தும், அந்தந்த படத்தைப் பார்த்த வாசகர்களுக்காக மட்டும்...  ஒருவேளை சம்பந்தப்பட்ட படத்தைப்பார்க்கவில்லையென்றால் , காணொளி இணைப்பை தவிர்த்து விட்டு , தொடர்ந்து வாசிக்கவும்.)
ஒவ்வொருவரும் நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ ட்விஸ்டை ரசிக்கிறோம். அது ஜோக், சிறுகதை, புதினம், திரைப்படம்,  என அது எந்த வகையில் இருந்தாலும்…. அதிலும் குறிப்பாக திரைப்படத்தில், இசை, காட்சியமைப்பு, நடிப்பு போன்றவற்றால் இந்த ட்விஸ்ட்’ன் த்ரில் பார்வையாளர்களை முழுமையாக சென்றடையும் வாய்ப்புகள் மிக அதிகம்.  எனவே நமக்கு நன்கு பழக்கமான திரைப்படத்தில் இந்த ட்விஸ்ட்’ஐ எப்படியெல்லாம் கையாள்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
ட்விஸ்ட் என்றால் என்ன?
நான் ராமசாமி’னு நெனச்சியா? நான் தான் குப்புசாமி!! போன்ற அபத்தமான ட்விஸ்ட்’டாக இல்லாமல், வழக்கமான கதையை கொண்ட படம் போலவே,  எந்த சந்தேகத்தையும் கிளப்பாமல் செல்லும். படம் பார்க்கும் நாமும் கதை இப்படித்தான் போகும் என யூகித்து வைத்து இருப்போம். ஆனால், கடைசி பத்து நிமிடங்களில் வரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ட்விஸ்ட்’களால் படத்தின் மொத்த கதையுமே புரட்டி போட்டு புதிதாக மாறும் போது (shutter island, sixth sense), அதைப்பார்க்கும் நமது அட்ரீனல், பிட்யூட்டரி என சகல சுரப்பிகளும் கலந்து காக்டெய்லாக மாறிய ரத்தம் அப்படியே தலையில் ஏறுமே அது தான், அந்த உணர்ச்சி தான். அதற்கு அடிமையாகி அவ்வகை ட்விஸ்டட் படங்களை தேடித்தேடிப் பார்த்திருக்கிறேன். பார்த்துக்கொண்டு இருக்கிறேன். பெரும்பாலும் இவ்வகை ட்விஸ்டட் படங்களை ஹாலிவுட்’ல் தான் அதிகம் வெளிவந்தாலும், அரிதாக அங்கொன்றும்,  இங்கொன்றுமாக பிறமொழிகளிலும் வெளியாகி இருக்கின்றன.
ட்விஸ்ட் வருவதன் நோக்கமே பார்வையாளனிடம் ஆச்சர்யத்தை அளிப்பதற்குத்தான் (prestige, shutter island, fight club) சில சமயம் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தைக்கூட அளிக்கலாம் (sixth sense, psycho, old boy). ஆனால் அதன் நோக்கம் ஒன்றுதான். பார்வையாளனைக் கவர்வது.
ஒரு படத்தில் ஆங்காங்கே சின்னச்சின்ன ட்விஸ்ட் இருந்தாலும், பட இறுதியில் வரும் ட்விஸ்டே பார்வையாளன் மனதில் தங்கும், எனவே அதனை சிறப்பாகக்கட்டமைத்தல் மிக முக்கியம். எனவே இவ்வகை படத்தில் பார்வையாளனுக்கு காட்டப்படும் ஒவ்வொரு காட்சியும் அந்த இறுதி ட்விஸ்டை மனதில் கொண்டே அமைந்திருப்பதைக்காணலாம்.
உதாரணமாக, FOLLOWING, படத்தின் நீளம் மொத்தமே 67 நிமிடங்கள்தான் . ஆனால், ஐம்பது நிமிடங்கள் வரை படம் சாதாரணமான படம் போலவே எந்த திருப்பமுமில்லாமல் செல்லும். சொல்லப்போனல் கொஞ்சம் போர் அடிக்கும். முதன்முறை இந்தப்படத்தைப் பார்த்த எனக்கும், 45 நிமிடங்கள் முடிந்த பிறகு, ட்விஸ்டின் அறிகுறிகள் தென்பட்டாலும், இதற்கு பிறகு என்னதான் ட்விஸ்ட் வந்தாலும், அது படத்தை மாற்றுமா? தேறாது..!! என்றே நினைத்துக்கொண்டு படத்தை பார்த்துக்கொண்டு இருந்தேன் . ஆனால் நடந்ததோ வேறு…!!! முன்பு சொன்ன அந்த காக்டெய்ல் மேட்டர்’ அங்கு நடந்தது. கடைசி பத்து நிமிடத்தில் வந்த அந்த ட்விஸ்டும், அதன் பிறகு வந்த ட்விஸ்டுக்கே ட்விஸ்டும், இயக்குனர் நோலனுக்கு சபாஷ்’ போட வைத்தது. முதலில் பார்க்கும் போது படத்திற்கு தேவையில்லாதது என நினைத்த பல காட்சிகள் இரண்டாவது தடவை பார்க்கும் போதுதான் அதன் முக்கியத்துவம் தெரிவது அட்டகாசம். அதற்காகவே பல ரிப்பீட்டட் ரசிகர்கள் இழுப்பதால் இம்முறை திரைக்கதையின் அமைப்பின் ஒரு முக்கிய அம்சம்.
பொதுவாக, ட்விஸ்டட் படங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்,
1. ட்விஸ்ட்’ஐ எதிர்பார்த்து பார்க்கும் படங்கள்,
2. ட்விஸ்டை எதிர்பார்க்காமலேயே, அதாவது ட்விஸ்ட் இருப்பது தெரியாமலேயே பார்க்கும் படங்கள்.
முதல் வகைப்படங்கள் சாதாரணமாக நமக்குத்தெரிந்த வகை, அதாவது, ஒரு கொலை நடக்கிறது. செய்தவர் யார் என ஆராயும் டிடெக்டிவ் வகை படங்கள் (scream, I know what u did the last summer). படம் பார்க்கும் எல்லோருமே டிடெக்டிவ்’வாக மாறி, தியேட்டர் ஆப்பரேட்டர் முதற்கொண்டு இவனா? அவனா? என எல்லா கதாபாத்திரங்களையும் சந்தேகப்பட்டு, முடிந்தால் கண்டுபிடித்து, முடியாவிட்டால், அப்பவே நெனச்சேன் என்று இறுதியில் சமாளித்து, பார்க்கும் படங்கள். இவ்வகை படங்களில் ட்விஸ்ட் வரும் என்று தெரிந்த போதும், அது யார் அந்த குற்றத்தை செய்தவர் என்ற நிலையுடன் நின்று விடும். பட இறுதியில் யாரோ ஒருவரைக்காட்டி, ‘இவர் தான் கொலையாளி’ என்றால் முடிந்தது. இதனை ஒரு முறை பார்த்தால் அதன் பிறகு பார்க்க கூட்டம் இருக்காது. திறமையான திரைக்கதையும், இயக்கமும் இல்லையெனில் இவ்வகைப் படங்கள் தேறுவது மிக கடினம். மேலும், படத்தை பார்க்கும் பல பேர் வாயிலேயே ஸ்பாய்லரை வேறு வைத்துக்கொண்டு அலைவதால், படம் பார்க்காத பலரையும் பார்க்காமல் செய்யும் வாய்ப்புக்கள் அதிகம்.
கீழே scream பட ட்விஸ்ட்... (இது ஒண்ணும் அவ்ளோ பெரிய ட்விஸ்ட் கெடயாது..ஆவ்வ்வ்....)
இதே முறையிலும் ட்விஸ்ட் வரப்போவது தெரிந்து பார்க்கும் போதும் , அது பார்வையாளன் சற்றும் எதிர்பார்க்காமல் அமையும் ட்விஸ்ட்’டாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அது வெற்றியடைவது சாத்தியம் (seven)
இதோ seven படத்தின் ட்விஸ்ட் , லொக்கேஷனையும், இசையையும் கவனியுங்கள்.
ஆனால் இரண்டாம் வகைப் படங்களின் (திரைக்) கதையே வேறு…!! படம் அது ஒரு கதையில் பயணித்துக்கொண்டு இருக்கும், நாமும் படத்துடன் ஒன்றியிருப்போம். வலிமையான பல காட்சிகளால் முதல், இடை, கடை என மூன்று அங்கங்களும் அமைக்கப்பட்டு இருக்கும். படத்தில் கையாளப்படும் முக்கிய பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வந்து படம் முடிந்தது எனக்கருதும் போது, அந்த சமயத்தில் ஒரு ட்விஸ்ட் வரும். இப்போது இந்த இடத்தில் ட்விஸ்டை நாம் எதிர்பார்த்து இருக்கவே மாட்டோம். இந்த ட்விஸ்டுக்குத்தான் வீச்சு அதிகம்.  உதாரணத்திற்கு the sixth sense , இந்தப்படத்தில் முக்கிய பிரச்சனை அந்த சிறுவனுக்கு உள்ள குறைபாடு. ஆனால் அந்த பிரச்சினை தீர்க்கப்பட்டதோடு படம் முடிந்தது என எழும் போது தான் அந்த ட்விஸ்ட் வெளியாகிறது. இப்போது வரும் இந்த ட்விஸ்ட் வலிந்து திணிக்கப்பட்டதாக இல்லாமல் இருப்பதால், இதன் வீச்சும் அதிகம். ஆனால் இந்த வகை ட்விஸ்ட்’களுக்கு ஸ்பாய்லர்கள் ஆங்காங்கே கொடுக்கப்பட்டே இருக்கும், ஆனால் அது நம் கண்ணில் படாமல், அப்படியே பட்டாலும் உறுத்தாமல் திறமையாகக்கையாளப்பட்டு இருக்கும். இரண்டாவது முறை பார்க்கும் போது தான் அது கண்ணில் படும்.
கீழே இருப்பது sixth sense படத்தின் ட்விஸ்ட் வெளிவரும் இறுதி இடம்,
முழுப்படத்திற்குமே ட்விஸ்ட் அச்சாணியாக இருக்கும் பட்சத்தில், அந்த ட்விஸ்டை வெளிப்படுத்தும் இடம் எப்படி இருக்க வேண்டும்? ஒரு திறமையான இயக்குனர் அதனை கவனமாகவும், புத்திசாலித்தனமாகவும் கையாள்வார். குறிப்பாக, ஹிட்ச்காக், டேவிட் ஃபின்ச்சர், மனோஜ் நைட் சியாமளன்(சில படங்களில் சொதப்பினாலும்) போன்றோர்.
ட்விஸ்டை வெறும் வசன நடையாக வெளிப்படுத்துவது ஒரு பாணி என்றால் (sherlock holms, uninvited) அதனை காட்சியாக சொல்வது ஒரு தனி வகை (old boy,) மாண்டேஜ் ‘ஆக சொல்வதும் குறிப்பிடத்தக்க வழியே (Illusionist)… (usual suspects படத்தில் உடல்மொழி மூலம் ட்விஸ்ட்’ஐ வெளிப்படுத்தி இருப்பர்)
usual suspect’ன் ட்விஸ்ட்’ஐ இங்கே காணுங்கள், எனக்குத்தெரிந்து , ட்விஸ்ட்’ஐ படு ஸ்டைலாக சொன்ன படம் இது தான்.....best revealation....
இன்னும் எனக்குத்தெரியாத நிறைய வகைகள் இதில் இருந்தாலும், என்னைப்பொறுத்தவரை மேலே மூன்றாவதாகக் குறிப்பிட்ட அந்த மாண்டேஜ் வகைக்குத்தான் முதலிடம்.
பட இறுதியில் அந்த குறிப்பிட்ட ட்விஸ்ட் வெளியானவுடன் ஏற்கனவே நாம் பார்த்த காட்சிகளும், வசனங்களும், வாய்ஸ் ஓவரின் ஊடே மாண்டேஜஸ்’ஸாக மீண்டும் காட்டப்படும் போது , இப்போது  அவை படத்தை புதிதாக வேறு கோணத்தில் மாற்றி, அந்த முக்கிய கதாபாத்திரம் முன்னர் செய்த செயல்கள் யாவும் வேறு அர்த்தத்துடன் தோன்றி பார்ப்போரை அசரடிப்பதை காணலாம் (kahaani, illusionist).
கீழ்காணும் ஆரண்யகாண்டம்  காணொளியில் 3:55 லிருந்து கவனியுங்கள்,
இதோ illusionist பட இறுதிக்காட்சி, இதை 2:50 லிருந்து கவனியுங்கள்,
தமிழ்ப்படங்களில் இதுவரை இவ்வகை சரிவரப்பயன்படுத்தப்படாமல் இருந்தாலும், தற்போது புதிய தலைமுறை இயக்குனர்கள் இப்போது தான் இதனை கையில் எடுத்துள்ளது போல் தெரிகிறது. (ஆரண்ய காண்டம், பீட்ஸா, அயன், கோ). இனி வருங்காலத்தில் இதை பெரிய அளவில் எடுத்துச்செல்வார்கள் என நம்புவோம்.

A SEPERATION (2011)
LANGUAGE : PERSIAN
A SEPERATION  என்ற ஈரானிய திரைப்படத்தைப்பற்றி உலக திரைப்பட ரசிகர்கள் நன்கு அறிந்து இருப்பீர்கள். தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம்,  a separation  திரைப்படம் ஈரானிய சினிமாவின் சமீபத்திய ஒரு அரிய படைப்பு. பெர்லின் திரைப்பட விழாவில் தங்கக்கரடி, வெள்ளிக்கரடி, பனிக்கரடி என பல விருதுகளுடன் GOLDEN GLOBE, BAFTA, போன்ற அனைத்து விருதுகளையும் வென்றதோடல்லாமல் உச்சகட்டமாக ஆஸ்கார் போட்டியில் சிறந்த வெளிநாட்டுப்படத்திற்கான ஆஸ்கரை வென்று சாதனை படைத்த முதல் ஈரானிய திரைப்படம். முதன்முதலில் சிறந்த திரைக்கதைக்காக ஆங்கிலம் அல்லாத மொழியில் ஆஸ்கரில் போட்டியிட்ட முதல் திரைப்படமும் இதுவே…!!!
அப்படி என்னதான் இருக்கிறது இந்தப்படத்தில்…..???
குடும்ப நல நீதிமன்றம்.
நாதிர் , சிமின் என்னும் தம்பதி நீதிபதி முன் அமர்ந்திருக்கின்றனர். பதினான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் தற்போது விவாகரத்திற்காக வந்துள்ளனர். காரணம், சிமின் , தற்போது நாட்டின் நிலவரம் தனது பதினோரு வயது மகள் தெர்மே வளர சரியான சூழ்நிலை இல்லை, மேலும் அவள் படிப்பிற்காகவும் வெளிநாடுதான் சிறந்தது என கருதுகிறாள். ஆனால் நாதிர், அல்ஸிம்மர் நோய் (Alzheimer’s disease) பாதித்த தனது தந்தையை உடனிருந்து கவனித்துக்கொள்ள வேண்டி இருப்பதால் அவனால் சிமின்’உடன் வர முடியாத நிலை. இருவரும் அவரவர் கருத்தில் உறுதியாக இருப்பதால், விவாகரத்து முடிவுக்கு வருகிறாள் சிமின். ஆனால் இருவரின் காரணமும் விவாகரத்திற்கு போதாதால் , நீதிமன்றத்தால் அவள் மனு நிராகரிக்கப்படுகிறது.
கோபமாக வீட்டுக்கு வரும் சிமின் தனது பொருட்களை எடுத்துக்கொண்டு தனது மகளை  நாதிரிடம் விட்டு விட்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விடுகிறாள். தெர்மே’ன் நிலை கேள்விக்குள்ளாகிறது.
நாதிர் வங்கியில் வேலை செய்வதால், பகலில் தனது தந்தையை கவனித்துக்கொள்ளவும் , வீட்டு வேலைக்கும் ரஸியா என்னும் ஒரு பெண்ணை நியமிக்கிறான். சாதாரணமாக பார்க்கும் போது, ஏதோ விவாகரத்து சார்ந்த படம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே படம் மெதுவாக வேறு தளத்திற்கு மாறுகிறது.
மறுநாள் ரஸியா என்னும் அந்த பெண் தனது சுமார் ஐந்து வயது குழந்தையுடன் வீட்டை கவனித்துக்கொள்ள வருகிறாள். வேலைக்கு வரும் போது அவள் நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது. ரஸியா இயல்பாகவே மத நம்பிக்கை அதிகம் உள்ள பெண். இஸ்லாமிய கோட்பாட்டின் படி வாழும் அவளுக்கு வேலைக்கு சேர்ந்த முதல் நாளே சோதனை காத்து இருக்கிறது. முன்பே கூறிய படி நாதிரின் அப்பா ஒரு அல்ஸிம்மர் நோயாளியாதலால் அவரால் இயற்கை உபாதை உட்பட வேறு எந்த வேலையையும் பிறர் துணையின்றி செய்து கொள்ள முடியாது என்பது வேலைக்கு வந்த பிறகு தான் ரஸியாவிற்கு தெரிய வருகிறது. ஆனால் தனது மதக்கோட்பாடு பிற ஆண்களைத்தொட அனுமதிக்காததால் இந்த வேலையை செய்ய தன்னால் முடியாது என நாதிரிடம் சொல்லி விட்டு, தற்சமயம் தனது கணவன் வேலை இல்லாமல் இருப்பதால் அந்த வேலைக்கு மறுநாள் தனது கணவனை அனுப்புவதாகக் கூறி விட்டுச்செல்கிறாள் . ஆனால் தான் வேலைக்கு வந்தது தனது கணவனுக்கு தெரிய வேண்டாம் என்றும் சொல்லி விட்டு செல்கிறாள் ரஸியா.
ஆனால், கொடுத்த கடனைத்திருப்பிக் கொடுக்காத காரணத்தால் தனது கணவனை போலீஸ் பிடித்துச்சென்று விட்டதாகக்கூறி, மறு நாளும் ரஸியாவே வேலைக்கு வருகிறாள்.
இப்படி இருக்கையில் ஒருநாள் மாலை நாதிர் வேலை முடிந்து, தனது மகளுடன் வீட்டிற்கு வரும் போது , வீட்டில் ரஸியா இல்லாமல், வீடு பூட்டப்பட்டு இருப்பதை காண்கிறான். தன்னிடம் இருக்கும் சாவியை வைத்து வீட்டை திறந்து உள்ளே செல்லும் இருவரும் நாதிரின் அப்பா கட்டிலில் கைகள் கட்டப்பட்ட நிலையில், மயங்கி கீழே விழுந்து கிடப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைகின்றனர்.
ஒரு வழியாக தனது மகளின் துணையுடன் அவரது கட்டுக்களை அவிழ்க்கும் நாதிர், அவருக்கு எதுவும் ஆகவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, அடுத்த வேலையாக மேசை டிராயரில் பணம் காணாமல் போனதையும் கண்டுபிடிக்கிறான். தனது மகள் அதை எடுக்கவில்லை என்பதையும் உறுதி செய்து கொள்கிறான்.
அதே சமயத்தில் ரஸியாவும் எங்கோ போய் விட்டு தனது குழந்தையுடன்  நாதிர் வீட்டுக்கு வருகிறாள். அவளைப்பார்த்தவுடன் ,தனது தந்தையை தனியே விட்டு விட்டு எங்கே சென்றாள் என விசாரிக்கும் போது அவளும் ஒரு முக்கிய வேலையாக வெளியே சென்றதாகக் கூறுகிறாள். கோபமடையும் நாதிர் அவள் பணத்தை திருடிச்சென்றதாக அவள் மீது குற்றம் சாட்டி, அவளை வீட்டை விட்டு வெளியே போகச்சொல்கிறான். அதை மறுத்து வாக்குவாதம் செய்யும் அவளை வெளியே தள்ளி கதவை சாத்துகிறான். வெளியே படிகளில் விழுந்த ரஸியா , தட்டுத்தடுமாறி எழுந்து சென்று விடுகிறாள். இங்கே தான் நாதிருக்கு பிரச்சினை ஆரம்பமாகிறது.
மறுநாள் வழக்கம் போல வேலைகளில் ஈடுபடும் நாதிருக்கு, ரஸியா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பது அவன் மனைவி சிமின் மூலம் தெரிய வருகிறது. ரஸியாவைப்பார்க்க மருத்துவமனை செல்லும் நாதிரும் , சிமினும் ரஸியாவிற்கு கருச்சிதைவு காரணமாக அறுவை சிகிச்சை நடந்திருப்பதைக்கேட்டு குழப்பமடைகின்றனர்.
அப்போது அங்கிருக்கும் ரஸியாவின் கணவனின் தங்கை, நாதிர் ரஸியாவைப்படிகளில் தள்ளி விட்டதால்தான் அவளது கரு கலைந்ததாக வாதிடுகிறாள். அப்போது அங்கிருக்கும் ரஸியாவின் கணவன் ஹோஜ்ஜத்’திற்கு அப்போது தான் ரஸியா வேலைக்குச் சென்றதும், நாதிர் அவளைத்தள்ளி விட்டதும் தெரிய வருகிறது. கேட்க வேண்டுமா?
இங்கே நாதிருக்கும், ஹோஜ்ஜாத்’திற்கும் இடையே நடக்கும் வாக்குவாதம் மிகத்திறமையாகப் படமாக்கப்பட்டுள்ளது. சில நிமிடங்களே வந்த போதும் முழுப்படத்திற்குமே இந்தக்காட்சி ஒரு மைல்கல் என்று கூறினால் அது மிகப்பொருத்தமாயிருக்கும்.
தொடந்து ஹோஜ்ஜாத், நாதிரின் மீது வழக்கு தொடுக்கிறான்.
கருவில் இறந்த குழந்தை நாலரை மாதம் ஆகையால் இஸ்லாமிய சட்டப்படி, அது கொலை வழக்காக கருதப்பட, நாதிருக்கு இன்னும் சிக்கல் பெரிதாகிறது.
ரஸியா உண்மையிலேயே பணத்தை திருடினாளா? உண்மையிலேயே நாதிர் குற்றவாளியா? எனில், நாதிருக்கு தண்டனை கிடைத்ததா? , நாதிரின் அப்பா மற்றும் மகள் தெர்மே’ன் நிலை என்ன?, சிமின்’க்கு அவள் விருப்பப்படி விவாகரத்து கிடைத்ததா? போன்றவற்றை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
ஒரு நல்ல புத்தகம் எப்படி படிப்பவர்களின் சுயத்தை அழித்து, தன்னுள் இழுத்துக்கொள்ளுமோ அது போலவே உண்மைக்கு நெருக்கமான ஒரு திரைப்படமும் அதைப்பார்க்கும் போது, சுற்றுப்புறத்தை மறக்கச்செய்து பார்ப்பவரையும் ஒரு கதாபாத்திரமாகவே மாற்றி கதையுடன் ஒன்றச்செய்யும். இது நமது இந்திய சினிமாவில் நடக்காத காரியம். பாட்டு, சண்டை என பல விசயங்கள் பார்ப்போரின் கவனத்தை சிதறச்செய்வதால் இது இந்திய சினிமாவில் வெகு அரிதான நிகழ்வு.  ,
A Seperation படம் பார்த்த போது அதை நான் அனுபவித்தேன். படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நானும் ஒரு கதாபாத்திரமாக மாறி விட்டதை உணர முடிந்தது. படம் பார்க்கிறோம் என்ற உணர்வின்றி, ஏதோ பக்கத்து வீட்டில் நடக்கும் சம்பவத்தை பார்ப்பதாகவே உணர்ந்தேன். ஒளிப்பதிவும் , காட்சி அமைப்பும் , வசனங்களும் அவ்வளவு இயற்கையாக இருந்தது. படத்தில் இசைக்கு பதிலாக, இயற்கையான ஒலிகளை மட்டுமே பயன்படுத்தி இருப்பது , அதன் உண்மைத்தன்மைக்கு மேலும் வலு சேர்க்கிறது.
படத்தின் பலமே அதன் வசனங்கள் தான். மிக நுணுக்கமாக , வெகு கவனமாக எழுதபட்ட கூர்மையான வசனங்கள். சில இடங்களில் மிக நீளமாக இருந்தாலும் ,புத்திசாலித்தனமாக இருப்பதால், அலுப்பு தட்டுவதே இல்லை. மேலும், ரஸியாவின் குழந்தையாக நடித்த அந்த சிறு பெண் முதல், நாதிரின் அப்பாவாக நடித்த அந்த வயதான பெரியவர் வரை அனைவரது உணர்ச்சிகளும் அவர்களது நடிப்பா, என்று சந்தேகம் வரும் படி வெகு இயல்பாக இருப்பது பாராட்டத்தக்கது.
படத்தில் சூழ்நிலையே எதிரியாக இருப்பதால், எதிர்மறை பாத்திரங்கள் எதுவும் இல்லை. எல்லா பாத்திரங்களின் மீதும் ஒரு வித அனுதாபம் தோன்றுவதால் , யாருமே குற்றவாளி இல்லை.
சயின்ஸ் ஃபிக்ஸன், ஃபேண்டஸி, த்ரில்லர், ஹாரர்  என உலக திரைப்படங்கள் உண்மையை விட்டு விலகிச்சென்று கொண்டு இருக்கும் போது, கடுமையான தணிக்கை முறையையும் தாண்டி ,வெறும் ஐந்தாறு கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு , வெகு சாதாரண பட்ஜெட்’ல் வாழ்விற்கு நெருக்கமான கதைகளை இயல்பாக எப்படி ஈரானிய இயக்குனர்களால் மட்டும் தர முடிகிறது என நினைக்கும் போது இயல்பாகவே எழும் ஒரு ஆற்றாமை உணர்வைத்தடுக்க முடியவில்லை.
இப்படத்தை எழுதி இயக்கி இருப்பவர் Dancing in the dust என்ற ஈரானிய திரைப்படம் மூலம் அடையாளம் காணப்பட்ட ஈரானின் மூன்றாம் தலைமுறை இயக்குனர் ‘ஆஸ்கர் (!) ஃபராடி’ (Aasghar farhadi) (என்ன ஒரு பெயர் பொருத்தம்??!!) (இந்தப்படமும் ஒரு விவாகரத்தைத் தொட்டுச்செல்லும் கதையே…)
ஆக மொத்தம் A Seperation படம் ஒவ்வொரு மனிதனின் உளவியலை அதன் போக்கிலேயே ஆராய்கிறது.
You can watch the Trailer here :

A BITTERSWEET LIFE (2005)
LANGUAGE: KOREAN
பழி வாங்க கிளம்புபவன் அவனுக்குமான குழியை வெட்டி வைத்து விட்டே கிளம்புகிறான்
- பழமொழி,
மனதை வருடும் மெல்லிய வயலின் இசை பிண்ணணியில் ஒலிக்க , சற்றேறக்குறைய ஒரு கார்ப்பரெட் கம்பெனி போன்ற வெண்மையான கேபின்களாலான ஒரு பகுதியினுள் கையில் சூட்கேஸூடன் மெதுவாக நுழைகிறான் அவன். அங்கிருக்கும் காவலாளி அவனை தடுக்க முயலும் போது அவன் கையில் இருக்கும் துப்பாக்கி அந்த காவலாளியை  நோக்கி வெடிக்க, வெண்ணிற சுவரில் சிவப்பு ரத்தம் தெறிக்கிறது. வயலின் இசை தொடர, தொடர்ந்து கண் முன் வரும் ஒவ்வொருவரையும் சுட்டுக்கொண்டே செல்கிறான் அவன்...... யார் அவன்? எதற்காக சுடுகிறான்?   நிற்க…
ஆனால் இந்த படத்தின் தொடக்கம் இதுவல்ல..!!??
2005 கேன்ஸில் திரையிடப்பட்டு அனைவரின் பாராட்டை பெற்ற இந்தப்படம், மரத்தை அசைப்பது காற்றா? மனமா? என்ற ஒரு எளிமையான ஒரு புத்த கதையுடன் ஆரம்பிக்கிறது.
கதையின் நாயகன் சன்-ஊ அந்த நட்சத்திர ஹோட்டலில் தனிமையாக சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறான் , அப்போது அங்கு வரும் ஒரு வேலையாள் அவன் காதில் பணிவாக எதோ பிரச்சினை பற்றி சொல்ல , உணவை முடித்து விட்டு கிளம்புகிறான் சன் ஊ. அந்த ஹோட்டலில் வேலை செய்யும் வேறு ஒருவனை துணைக்கு அழைத்துக்கொன்டு ஹோட்டலின் மறுபகுதிக்கு வருகிறான், அங்கு பிரச்சனைக்குரிய மூன்று உள்ளூர் ரவுடிகளை அடித்து விரட்டுகிறான். அவர்கள் தொழில் போட்டி காரணமாக பெய்க் என்பவனால் அனுப்பப்பட்டவர்கள் என்பது பின்னர் தெரிய வருகிறது. இதிலிருந்தே சன்-ஊ அந்த ஹோட்டலில் என்ன வேலை செய்கிறான் என்பது தெரிந்து விடுகிறது.
சன் ஊ, காங் என்பவருக்கு சொந்தமான அந்த நட்சத்திர ஹோட்டலில் ஏறக்குறைய ஒரு அடியாள் வேலை செய்பவன். எப்போதும் இறுகிய முகத்துடன், குடும்பமோ, நண்பர்களோ காதலியோ இன்றி தனிமையிலேயே வாழ்பவன். காங் ஒரு நடுத்தர வயதை கடந்த ஆசாமி.
வேறு எவரையும் விட சன் ஊ வை முழுமையாக நம்புகிறார் காங். ஆகவே சன் ஊ-விடம் ஒரு முக்கிய பொறுப்பினை ஒப்படைக்கிறார். தான் வேலை விஷயமாக 3   நாட்கள் ஷாங்காய் செல்வதால் , தான் திரும்ப வரும் வரை தன் காதலி ஹீ சூ வை பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி சொல்கிறார் காங் . ஆனால் அதன் பிறகு சொல்வது தான் முக்கியமானது. ஹீ சூ வின் வயது காங்-ன் வயதில் பாதிக்கும் குறைவு. இளமையானவள். மேலும், ஹீ சூ , அவருடைய கண்காணிப்பில் இருந்த போதும், அவளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும். இருவரும் அடிக்கடி சந்திப்பதாகவும் தான் சந்தேகிப்பதாக கூறுகிறார்  எனவே காங் வெளியூர் செல்லும் சமயம் , அவர்கள் அப்படி சந்தித்தால் அவர்கள் எதற்காக சந்திக்கிறார்கள் என்றும் ஒரு வேளை  அவர்களின் சந்திப்பு உடல் ரீதியாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக கொன்று விட்டு தனக்கு தகவல் சொல்லும் படி சொல்லி விட்டு ஹீ சூ –ன் விசிட்டிங் கார்டு’ஐயும், தன்னுடைய ஷாங்காய் ஃபோன் நம்பரை கொடுத்து விட்டு இந்த விஷயத்தில் சன் ஊ-வை முழுமையாக நம்புவதாக கூறிவிட்டு ஷாங்காய் சென்று விடுகிறார் காங்.
அடுத்த நாள்  ஹீ சூ வை சந்திக்கும் சன் ஊ, காங் ஷாங்காய் செல்வதால், 3 நாட்கள் அவளை பார்த்துக்கொள்ள சொல்லி அவர் அனுப்பியதாக கூறுகிறான். அவளுக்கு சன் ஊ-வை பிடிக்காத போதும் வேறு வழி இல்லாமல் அவனை உடன் இருக்க ஒத்துக்கொள்கிறாள். ஹீ சூ ஒரு செல்லொ (கொஞ்சம் பெரிய சைஸ் வயலின்) எனப்படும் ஒரு வகை இசைக்கருவியை வாசிக்கும் இசை கலைஙி சன் ஊ ம் அவளுக்கு துணையாக அவள் சொல்லும் இடங்களுக்கு சென்று வருகிறான். பகலில் அவளுக்கு தெரிந்தும் ,இரவில் அவளுக்கு தெரியாமலும். . ஆனாலும் அவள் யாரோ ஒருவரை அடிக்கடி சந்திப்பதுடன் அந்த யாரோ ஒருவருடன் ஹோட்டல் , டிஸ்கோதே என்று செல்கிறாள். இதையெல்லாம் பார்த்தும் சன் ஊ பொறுமையாகவே இருக்கிறான். ஒரு சமயம் ஹீ சூ வுடன் ரெக்கார்டிங் தியேட்டருக்கு சென்ற போது அவள் செல்லொ எனும் அந்த இசை கருவியை வாசிப்பதை கேட்கிறான். இந்த இடம் எவ்வளவு முக்கியமானது என்பது படத்தின் இறுதியில் தெரிய வரும்.
இப்படியாக போய்க்கொண்டிருக்கும் போது எதிர்பாராத ஒரு இரவில் ஹீ சூ வை அவளது வீட்டிலேயே ,அவளது காதலனுடன்  கையும் களவுமாக பிடிக்கிறான் சன் ஊ. அங்கேயே அவளது காதலனை அடிக்கும் சன் ஊ , தனது முதலாளி காங்-ற்கு விஷயத்தை சொல்ல தனது செல்போனை எடுக்கும் அந்த ஒரு நிமிடத்தில் ஒரு சிறிய தடுமாற்றத்தின் காரணமாக அவர்களை மன்னிக்கிறான், அவர்கள் மீண்டும் சந்திக்கவே கூடாது என்னும் நிபந்தனையுடன்….
அத்துடன் அன்று இரவு நடந்ததை அப்படியே மறந்து விடும் படி ஹீ சூ-விடம் சொல்லி விட்டு, கிளம்புகிறான் சன் ஊ. வீட்டுக்கு செல்லும் அவனை கார் பார்க்கிங்-ல் ஒருவன் சந்தித்து, தான் பெய்க்-ன் ஆள் எனவும், சன் ஊ , முன்னர் பெய்க்-ன் ஆட்களை அடித்த காரணத்திற்காக பெய்க்-கிடம் மன்னிப்பு கேட்கும் படியும் சொல்கிறான் ஏற்கனவே கோபத்தில் இருக்கும் சன் ஊ, அவனை கடுமையாகத்திட்டி அனுப்பி விடுகிறான்.
அதன் பிறகு
வீட்டில் தனிமையில் ஆழ்ந்த யோசனையில் இருக்கும் சன் ஊ , திடீரென தாக்கப்பட்டு, கடத்தப்படுகிறான். அதன் பின் வரும் சற்றே நீளமான, கடுமையான சித்திரவதைக்கு பிறகு , இடது கை ஒடிக்கப்பட்டு, உயிருடன் மண்ணில் புதைக்கப்படுகிறான் சன் ஊ. தொடர்ந்த சம்பவங்களும் கதையை வேறு தளத்தை நோக்கி இழுத்துச்செல்கிறது.
சன் ஊ-வை கடத்தியது யார்? ஏன்? அவர்களிடமிருந்து சன் ஊ வால் தப்பிக்க முடிந்ததா? என்பவை வெண்திரையில்(?)
கேட்பதற்கு மிக எளிமையாக இருக்கும் இந்த கதை அதை எடுத்த விதத்தில் மாறுபடுகிறது. கொரிய படங்களைப்போல் , பழி வாங்கும் கதைகளை வேறு எந்த மொழியாவது இவ்வளவு சிறப்பாக கையாண்டு இருக்குமா என்பது சந்தேகமே..!! உலக திரைப்பட ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான vengeance trilogy வகைப்படங்களும் இம்மொழிப்படங்களே என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை.  நாம் பிற இணைய பதிவுகளில் அதிகம் பார்த்த the quiet family, a tale of two sisters , the good bad weird படங்களை எடுத்த kim jee woon இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். Kim jee woon எனக்கு மிகவும் பிடித்த கொரிய இயக்குனர். அவரது ஒவ்வொரு படங்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்டு, சிறப்பான அனுபவத்தை தரக்கூடியவை. குறிப்பாக, இந்தப்படமும் அந்த வரிசையில். வருவது தான். ட்விஸ்ட், திடீர் திருப்பம், நான்- லீனேயர் என எதுவும் இல்லாமல் நேர்கோட்டில் பயணிக்கும் இந்தப்படம் முடியும் போது ஒரு நெஞ்சை தொடும் அனுபவத்தை தருகிறது. அதற்கு இசையும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. மேலும் படத்தின் முக்கிய திருப்பத்திற்கு இசையே பிரதான புள்ளியாக அமைவதால் இசை மிகச்சரியாகப்பயன்படுத்தப்பட்டு, படம் முழுவதும் ஒரு மெல்லிய சோகம் இழையோடுகிறது.
எல்லா கொரிய திரைப்படங்களிலும் இசைக்கு ஒரு முக்கிய இடம் இருக்கும் . அது காதல் படமாக இருந்தாலும் சரி, கொத்து கறி போடும் வன்முறைப்படமாக இருந்தாலும் சரி…. குறிப்பாக வயலினையும், பியானோவையும் அவர்கள் பயன்படுத்தும் விதமே அலாதியானது. அதிலும் ஏறக்குறைய எல்லா கொரிய படத்திலும், திரையில் கொடூரமான வன்முறை காட்சி ஓடிக்கொண்டு இருக்கும் போதும் கூட பிண்ணனியில் மெல்லிய வயலினோ பியானோ-வோ கேட்பது எதோ ரொமாண்டிக் படங்கள் அல்லது மெலோடிராமாக்களை நினைவூட்டினாலும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை தருவதை மறுப்பதிற்கில்லை. இதே பிண்ணணி இசை முறையை பின்பற்றி பின்னாட்களில் எறக்குறைய அனைத்து மொழிகளிலும் பல படங்கள் வந்தன. தமிழில் கூட மிஷ்கின் படங்களில் இதன் பாதிப்பை பார்க்க முடியும். இந்தப்படமும் அதே பட்டியலில் வந்த போதும் அதையும் தாண்டி இயக்கம், கலை, ஒளிப்பதிவு , நடிப்பு போன்ற பல விஷயங்கள் இந்தப்படத்தை ஒரு மறக்க முடியாத படமாக மாற்றுகின்றன . குறிப்பாக சன் ஊ-வாக நடித்த byung hun , ஓவர் ஆக்டிங் இல்லாத இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். படத்தில் மொத்தமே ஒரு முறை தான் சிரிக்கிறார்.
நல்ல ஒளிப்பதிவும் இயக்கமும் சாதாரண கதையைக்கூட பார்க்க சிறப்பானதொன்றாக மாற்றி விடும் என்பதற்கு இந்தப்படமும் ஒரு உதாரணம். படத்தின் ஆரம்பத்தை போலவே முடிவிலும் ஒரு புத்த துறவியின் பலிக்காத ஒரு கனவைப்பற்றிய புத்த கதை வருகிறது. அதுவும் சன் ஊ-ன் கனவாகவே இருக்கலாம். மொத்ததில் உலக திரைப்பட விரும்பிகள் தவற விடக்கூடாத படம் இந்த A BITTERSWEET LIFE…..
பின்குறிப்பு- இதே படத்தை தழுவி ஹிந்தியில் awaarpaan என்ற படம் எடுக்கப்பட்டு அது ஹிட் அடித்தது தனிக்கதை…..

About Me

About Me..

a simple man , having great obsession on films whatever language it is.....