Monday, November 19, 2012


A SEPERATION (2011)
LANGUAGE : PERSIAN
A SEPERATION  என்ற ஈரானிய திரைப்படத்தைப்பற்றி உலக திரைப்பட ரசிகர்கள் நன்கு அறிந்து இருப்பீர்கள். தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம்,  a separation  திரைப்படம் ஈரானிய சினிமாவின் சமீபத்திய ஒரு அரிய படைப்பு. பெர்லின் திரைப்பட விழாவில் தங்கக்கரடி, வெள்ளிக்கரடி, பனிக்கரடி என பல விருதுகளுடன் GOLDEN GLOBE, BAFTA, போன்ற அனைத்து விருதுகளையும் வென்றதோடல்லாமல் உச்சகட்டமாக ஆஸ்கார் போட்டியில் சிறந்த வெளிநாட்டுப்படத்திற்கான ஆஸ்கரை வென்று சாதனை படைத்த முதல் ஈரானிய திரைப்படம். முதன்முதலில் சிறந்த திரைக்கதைக்காக ஆங்கிலம் அல்லாத மொழியில் ஆஸ்கரில் போட்டியிட்ட முதல் திரைப்படமும் இதுவே…!!!
அப்படி என்னதான் இருக்கிறது இந்தப்படத்தில்…..???
குடும்ப நல நீதிமன்றம்.
நாதிர் , சிமின் என்னும் தம்பதி நீதிபதி முன் அமர்ந்திருக்கின்றனர். பதினான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் தற்போது விவாகரத்திற்காக வந்துள்ளனர். காரணம், சிமின் , தற்போது நாட்டின் நிலவரம் தனது பதினோரு வயது மகள் தெர்மே வளர சரியான சூழ்நிலை இல்லை, மேலும் அவள் படிப்பிற்காகவும் வெளிநாடுதான் சிறந்தது என கருதுகிறாள். ஆனால் நாதிர், அல்ஸிம்மர் நோய் (Alzheimer’s disease) பாதித்த தனது தந்தையை உடனிருந்து கவனித்துக்கொள்ள வேண்டி இருப்பதால் அவனால் சிமின்’உடன் வர முடியாத நிலை. இருவரும் அவரவர் கருத்தில் உறுதியாக இருப்பதால், விவாகரத்து முடிவுக்கு வருகிறாள் சிமின். ஆனால் இருவரின் காரணமும் விவாகரத்திற்கு போதாதால் , நீதிமன்றத்தால் அவள் மனு நிராகரிக்கப்படுகிறது.
கோபமாக வீட்டுக்கு வரும் சிமின் தனது பொருட்களை எடுத்துக்கொண்டு தனது மகளை  நாதிரிடம் விட்டு விட்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விடுகிறாள். தெர்மே’ன் நிலை கேள்விக்குள்ளாகிறது.
நாதிர் வங்கியில் வேலை செய்வதால், பகலில் தனது தந்தையை கவனித்துக்கொள்ளவும் , வீட்டு வேலைக்கும் ரஸியா என்னும் ஒரு பெண்ணை நியமிக்கிறான். சாதாரணமாக பார்க்கும் போது, ஏதோ விவாகரத்து சார்ந்த படம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே படம் மெதுவாக வேறு தளத்திற்கு மாறுகிறது.
மறுநாள் ரஸியா என்னும் அந்த பெண் தனது சுமார் ஐந்து வயது குழந்தையுடன் வீட்டை கவனித்துக்கொள்ள வருகிறாள். வேலைக்கு வரும் போது அவள் நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது. ரஸியா இயல்பாகவே மத நம்பிக்கை அதிகம் உள்ள பெண். இஸ்லாமிய கோட்பாட்டின் படி வாழும் அவளுக்கு வேலைக்கு சேர்ந்த முதல் நாளே சோதனை காத்து இருக்கிறது. முன்பே கூறிய படி நாதிரின் அப்பா ஒரு அல்ஸிம்மர் நோயாளியாதலால் அவரால் இயற்கை உபாதை உட்பட வேறு எந்த வேலையையும் பிறர் துணையின்றி செய்து கொள்ள முடியாது என்பது வேலைக்கு வந்த பிறகு தான் ரஸியாவிற்கு தெரிய வருகிறது. ஆனால் தனது மதக்கோட்பாடு பிற ஆண்களைத்தொட அனுமதிக்காததால் இந்த வேலையை செய்ய தன்னால் முடியாது என நாதிரிடம் சொல்லி விட்டு, தற்சமயம் தனது கணவன் வேலை இல்லாமல் இருப்பதால் அந்த வேலைக்கு மறுநாள் தனது கணவனை அனுப்புவதாகக் கூறி விட்டுச்செல்கிறாள் . ஆனால் தான் வேலைக்கு வந்தது தனது கணவனுக்கு தெரிய வேண்டாம் என்றும் சொல்லி விட்டு செல்கிறாள் ரஸியா.
ஆனால், கொடுத்த கடனைத்திருப்பிக் கொடுக்காத காரணத்தால் தனது கணவனை போலீஸ் பிடித்துச்சென்று விட்டதாகக்கூறி, மறு நாளும் ரஸியாவே வேலைக்கு வருகிறாள்.
இப்படி இருக்கையில் ஒருநாள் மாலை நாதிர் வேலை முடிந்து, தனது மகளுடன் வீட்டிற்கு வரும் போது , வீட்டில் ரஸியா இல்லாமல், வீடு பூட்டப்பட்டு இருப்பதை காண்கிறான். தன்னிடம் இருக்கும் சாவியை வைத்து வீட்டை திறந்து உள்ளே செல்லும் இருவரும் நாதிரின் அப்பா கட்டிலில் கைகள் கட்டப்பட்ட நிலையில், மயங்கி கீழே விழுந்து கிடப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைகின்றனர்.
ஒரு வழியாக தனது மகளின் துணையுடன் அவரது கட்டுக்களை அவிழ்க்கும் நாதிர், அவருக்கு எதுவும் ஆகவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, அடுத்த வேலையாக மேசை டிராயரில் பணம் காணாமல் போனதையும் கண்டுபிடிக்கிறான். தனது மகள் அதை எடுக்கவில்லை என்பதையும் உறுதி செய்து கொள்கிறான்.
அதே சமயத்தில் ரஸியாவும் எங்கோ போய் விட்டு தனது குழந்தையுடன்  நாதிர் வீட்டுக்கு வருகிறாள். அவளைப்பார்த்தவுடன் ,தனது தந்தையை தனியே விட்டு விட்டு எங்கே சென்றாள் என விசாரிக்கும் போது அவளும் ஒரு முக்கிய வேலையாக வெளியே சென்றதாகக் கூறுகிறாள். கோபமடையும் நாதிர் அவள் பணத்தை திருடிச்சென்றதாக அவள் மீது குற்றம் சாட்டி, அவளை வீட்டை விட்டு வெளியே போகச்சொல்கிறான். அதை மறுத்து வாக்குவாதம் செய்யும் அவளை வெளியே தள்ளி கதவை சாத்துகிறான். வெளியே படிகளில் விழுந்த ரஸியா , தட்டுத்தடுமாறி எழுந்து சென்று விடுகிறாள். இங்கே தான் நாதிருக்கு பிரச்சினை ஆரம்பமாகிறது.
மறுநாள் வழக்கம் போல வேலைகளில் ஈடுபடும் நாதிருக்கு, ரஸியா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பது அவன் மனைவி சிமின் மூலம் தெரிய வருகிறது. ரஸியாவைப்பார்க்க மருத்துவமனை செல்லும் நாதிரும் , சிமினும் ரஸியாவிற்கு கருச்சிதைவு காரணமாக அறுவை சிகிச்சை நடந்திருப்பதைக்கேட்டு குழப்பமடைகின்றனர்.
அப்போது அங்கிருக்கும் ரஸியாவின் கணவனின் தங்கை, நாதிர் ரஸியாவைப்படிகளில் தள்ளி விட்டதால்தான் அவளது கரு கலைந்ததாக வாதிடுகிறாள். அப்போது அங்கிருக்கும் ரஸியாவின் கணவன் ஹோஜ்ஜத்’திற்கு அப்போது தான் ரஸியா வேலைக்குச் சென்றதும், நாதிர் அவளைத்தள்ளி விட்டதும் தெரிய வருகிறது. கேட்க வேண்டுமா?
இங்கே நாதிருக்கும், ஹோஜ்ஜாத்’திற்கும் இடையே நடக்கும் வாக்குவாதம் மிகத்திறமையாகப் படமாக்கப்பட்டுள்ளது. சில நிமிடங்களே வந்த போதும் முழுப்படத்திற்குமே இந்தக்காட்சி ஒரு மைல்கல் என்று கூறினால் அது மிகப்பொருத்தமாயிருக்கும்.
தொடந்து ஹோஜ்ஜாத், நாதிரின் மீது வழக்கு தொடுக்கிறான்.
கருவில் இறந்த குழந்தை நாலரை மாதம் ஆகையால் இஸ்லாமிய சட்டப்படி, அது கொலை வழக்காக கருதப்பட, நாதிருக்கு இன்னும் சிக்கல் பெரிதாகிறது.
ரஸியா உண்மையிலேயே பணத்தை திருடினாளா? உண்மையிலேயே நாதிர் குற்றவாளியா? எனில், நாதிருக்கு தண்டனை கிடைத்ததா? , நாதிரின் அப்பா மற்றும் மகள் தெர்மே’ன் நிலை என்ன?, சிமின்’க்கு அவள் விருப்பப்படி விவாகரத்து கிடைத்ததா? போன்றவற்றை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
ஒரு நல்ல புத்தகம் எப்படி படிப்பவர்களின் சுயத்தை அழித்து, தன்னுள் இழுத்துக்கொள்ளுமோ அது போலவே உண்மைக்கு நெருக்கமான ஒரு திரைப்படமும் அதைப்பார்க்கும் போது, சுற்றுப்புறத்தை மறக்கச்செய்து பார்ப்பவரையும் ஒரு கதாபாத்திரமாகவே மாற்றி கதையுடன் ஒன்றச்செய்யும். இது நமது இந்திய சினிமாவில் நடக்காத காரியம். பாட்டு, சண்டை என பல விசயங்கள் பார்ப்போரின் கவனத்தை சிதறச்செய்வதால் இது இந்திய சினிமாவில் வெகு அரிதான நிகழ்வு.  ,
A Seperation படம் பார்த்த போது அதை நான் அனுபவித்தேன். படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நானும் ஒரு கதாபாத்திரமாக மாறி விட்டதை உணர முடிந்தது. படம் பார்க்கிறோம் என்ற உணர்வின்றி, ஏதோ பக்கத்து வீட்டில் நடக்கும் சம்பவத்தை பார்ப்பதாகவே உணர்ந்தேன். ஒளிப்பதிவும் , காட்சி அமைப்பும் , வசனங்களும் அவ்வளவு இயற்கையாக இருந்தது. படத்தில் இசைக்கு பதிலாக, இயற்கையான ஒலிகளை மட்டுமே பயன்படுத்தி இருப்பது , அதன் உண்மைத்தன்மைக்கு மேலும் வலு சேர்க்கிறது.
படத்தின் பலமே அதன் வசனங்கள் தான். மிக நுணுக்கமாக , வெகு கவனமாக எழுதபட்ட கூர்மையான வசனங்கள். சில இடங்களில் மிக நீளமாக இருந்தாலும் ,புத்திசாலித்தனமாக இருப்பதால், அலுப்பு தட்டுவதே இல்லை. மேலும், ரஸியாவின் குழந்தையாக நடித்த அந்த சிறு பெண் முதல், நாதிரின் அப்பாவாக நடித்த அந்த வயதான பெரியவர் வரை அனைவரது உணர்ச்சிகளும் அவர்களது நடிப்பா, என்று சந்தேகம் வரும் படி வெகு இயல்பாக இருப்பது பாராட்டத்தக்கது.
படத்தில் சூழ்நிலையே எதிரியாக இருப்பதால், எதிர்மறை பாத்திரங்கள் எதுவும் இல்லை. எல்லா பாத்திரங்களின் மீதும் ஒரு வித அனுதாபம் தோன்றுவதால் , யாருமே குற்றவாளி இல்லை.
சயின்ஸ் ஃபிக்ஸன், ஃபேண்டஸி, த்ரில்லர், ஹாரர்  என உலக திரைப்படங்கள் உண்மையை விட்டு விலகிச்சென்று கொண்டு இருக்கும் போது, கடுமையான தணிக்கை முறையையும் தாண்டி ,வெறும் ஐந்தாறு கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு , வெகு சாதாரண பட்ஜெட்’ல் வாழ்விற்கு நெருக்கமான கதைகளை இயல்பாக எப்படி ஈரானிய இயக்குனர்களால் மட்டும் தர முடிகிறது என நினைக்கும் போது இயல்பாகவே எழும் ஒரு ஆற்றாமை உணர்வைத்தடுக்க முடியவில்லை.
இப்படத்தை எழுதி இயக்கி இருப்பவர் Dancing in the dust என்ற ஈரானிய திரைப்படம் மூலம் அடையாளம் காணப்பட்ட ஈரானின் மூன்றாம் தலைமுறை இயக்குனர் ‘ஆஸ்கர் (!) ஃபராடி’ (Aasghar farhadi) (என்ன ஒரு பெயர் பொருத்தம்??!!) (இந்தப்படமும் ஒரு விவாகரத்தைத் தொட்டுச்செல்லும் கதையே…)
ஆக மொத்தம் A Seperation படம் ஒவ்வொரு மனிதனின் உளவியலை அதன் போக்கிலேயே ஆராய்கிறது.
You can watch the Trailer here :

No comments:

Post a Comment