Monday, November 19, 2012


A BITTERSWEET LIFE (2005)
LANGUAGE: KOREAN
பழி வாங்க கிளம்புபவன் அவனுக்குமான குழியை வெட்டி வைத்து விட்டே கிளம்புகிறான்
- பழமொழி,
மனதை வருடும் மெல்லிய வயலின் இசை பிண்ணணியில் ஒலிக்க , சற்றேறக்குறைய ஒரு கார்ப்பரெட் கம்பெனி போன்ற வெண்மையான கேபின்களாலான ஒரு பகுதியினுள் கையில் சூட்கேஸூடன் மெதுவாக நுழைகிறான் அவன். அங்கிருக்கும் காவலாளி அவனை தடுக்க முயலும் போது அவன் கையில் இருக்கும் துப்பாக்கி அந்த காவலாளியை  நோக்கி வெடிக்க, வெண்ணிற சுவரில் சிவப்பு ரத்தம் தெறிக்கிறது. வயலின் இசை தொடர, தொடர்ந்து கண் முன் வரும் ஒவ்வொருவரையும் சுட்டுக்கொண்டே செல்கிறான் அவன்...... யார் அவன்? எதற்காக சுடுகிறான்?   நிற்க…
ஆனால் இந்த படத்தின் தொடக்கம் இதுவல்ல..!!??
2005 கேன்ஸில் திரையிடப்பட்டு அனைவரின் பாராட்டை பெற்ற இந்தப்படம், மரத்தை அசைப்பது காற்றா? மனமா? என்ற ஒரு எளிமையான ஒரு புத்த கதையுடன் ஆரம்பிக்கிறது.
கதையின் நாயகன் சன்-ஊ அந்த நட்சத்திர ஹோட்டலில் தனிமையாக சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறான் , அப்போது அங்கு வரும் ஒரு வேலையாள் அவன் காதில் பணிவாக எதோ பிரச்சினை பற்றி சொல்ல , உணவை முடித்து விட்டு கிளம்புகிறான் சன் ஊ. அந்த ஹோட்டலில் வேலை செய்யும் வேறு ஒருவனை துணைக்கு அழைத்துக்கொன்டு ஹோட்டலின் மறுபகுதிக்கு வருகிறான், அங்கு பிரச்சனைக்குரிய மூன்று உள்ளூர் ரவுடிகளை அடித்து விரட்டுகிறான். அவர்கள் தொழில் போட்டி காரணமாக பெய்க் என்பவனால் அனுப்பப்பட்டவர்கள் என்பது பின்னர் தெரிய வருகிறது. இதிலிருந்தே சன்-ஊ அந்த ஹோட்டலில் என்ன வேலை செய்கிறான் என்பது தெரிந்து விடுகிறது.
சன் ஊ, காங் என்பவருக்கு சொந்தமான அந்த நட்சத்திர ஹோட்டலில் ஏறக்குறைய ஒரு அடியாள் வேலை செய்பவன். எப்போதும் இறுகிய முகத்துடன், குடும்பமோ, நண்பர்களோ காதலியோ இன்றி தனிமையிலேயே வாழ்பவன். காங் ஒரு நடுத்தர வயதை கடந்த ஆசாமி.
வேறு எவரையும் விட சன் ஊ வை முழுமையாக நம்புகிறார் காங். ஆகவே சன் ஊ-விடம் ஒரு முக்கிய பொறுப்பினை ஒப்படைக்கிறார். தான் வேலை விஷயமாக 3   நாட்கள் ஷாங்காய் செல்வதால் , தான் திரும்ப வரும் வரை தன் காதலி ஹீ சூ வை பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி சொல்கிறார் காங் . ஆனால் அதன் பிறகு சொல்வது தான் முக்கியமானது. ஹீ சூ வின் வயது காங்-ன் வயதில் பாதிக்கும் குறைவு. இளமையானவள். மேலும், ஹீ சூ , அவருடைய கண்காணிப்பில் இருந்த போதும், அவளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும். இருவரும் அடிக்கடி சந்திப்பதாகவும் தான் சந்தேகிப்பதாக கூறுகிறார்  எனவே காங் வெளியூர் செல்லும் சமயம் , அவர்கள் அப்படி சந்தித்தால் அவர்கள் எதற்காக சந்திக்கிறார்கள் என்றும் ஒரு வேளை  அவர்களின் சந்திப்பு உடல் ரீதியாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக கொன்று விட்டு தனக்கு தகவல் சொல்லும் படி சொல்லி விட்டு ஹீ சூ –ன் விசிட்டிங் கார்டு’ஐயும், தன்னுடைய ஷாங்காய் ஃபோன் நம்பரை கொடுத்து விட்டு இந்த விஷயத்தில் சன் ஊ-வை முழுமையாக நம்புவதாக கூறிவிட்டு ஷாங்காய் சென்று விடுகிறார் காங்.
அடுத்த நாள்  ஹீ சூ வை சந்திக்கும் சன் ஊ, காங் ஷாங்காய் செல்வதால், 3 நாட்கள் அவளை பார்த்துக்கொள்ள சொல்லி அவர் அனுப்பியதாக கூறுகிறான். அவளுக்கு சன் ஊ-வை பிடிக்காத போதும் வேறு வழி இல்லாமல் அவனை உடன் இருக்க ஒத்துக்கொள்கிறாள். ஹீ சூ ஒரு செல்லொ (கொஞ்சம் பெரிய சைஸ் வயலின்) எனப்படும் ஒரு வகை இசைக்கருவியை வாசிக்கும் இசை கலைஙி சன் ஊ ம் அவளுக்கு துணையாக அவள் சொல்லும் இடங்களுக்கு சென்று வருகிறான். பகலில் அவளுக்கு தெரிந்தும் ,இரவில் அவளுக்கு தெரியாமலும். . ஆனாலும் அவள் யாரோ ஒருவரை அடிக்கடி சந்திப்பதுடன் அந்த யாரோ ஒருவருடன் ஹோட்டல் , டிஸ்கோதே என்று செல்கிறாள். இதையெல்லாம் பார்த்தும் சன் ஊ பொறுமையாகவே இருக்கிறான். ஒரு சமயம் ஹீ சூ வுடன் ரெக்கார்டிங் தியேட்டருக்கு சென்ற போது அவள் செல்லொ எனும் அந்த இசை கருவியை வாசிப்பதை கேட்கிறான். இந்த இடம் எவ்வளவு முக்கியமானது என்பது படத்தின் இறுதியில் தெரிய வரும்.
இப்படியாக போய்க்கொண்டிருக்கும் போது எதிர்பாராத ஒரு இரவில் ஹீ சூ வை அவளது வீட்டிலேயே ,அவளது காதலனுடன்  கையும் களவுமாக பிடிக்கிறான் சன் ஊ. அங்கேயே அவளது காதலனை அடிக்கும் சன் ஊ , தனது முதலாளி காங்-ற்கு விஷயத்தை சொல்ல தனது செல்போனை எடுக்கும் அந்த ஒரு நிமிடத்தில் ஒரு சிறிய தடுமாற்றத்தின் காரணமாக அவர்களை மன்னிக்கிறான், அவர்கள் மீண்டும் சந்திக்கவே கூடாது என்னும் நிபந்தனையுடன்….
அத்துடன் அன்று இரவு நடந்ததை அப்படியே மறந்து விடும் படி ஹீ சூ-விடம் சொல்லி விட்டு, கிளம்புகிறான் சன் ஊ. வீட்டுக்கு செல்லும் அவனை கார் பார்க்கிங்-ல் ஒருவன் சந்தித்து, தான் பெய்க்-ன் ஆள் எனவும், சன் ஊ , முன்னர் பெய்க்-ன் ஆட்களை அடித்த காரணத்திற்காக பெய்க்-கிடம் மன்னிப்பு கேட்கும் படியும் சொல்கிறான் ஏற்கனவே கோபத்தில் இருக்கும் சன் ஊ, அவனை கடுமையாகத்திட்டி அனுப்பி விடுகிறான்.
அதன் பிறகு
வீட்டில் தனிமையில் ஆழ்ந்த யோசனையில் இருக்கும் சன் ஊ , திடீரென தாக்கப்பட்டு, கடத்தப்படுகிறான். அதன் பின் வரும் சற்றே நீளமான, கடுமையான சித்திரவதைக்கு பிறகு , இடது கை ஒடிக்கப்பட்டு, உயிருடன் மண்ணில் புதைக்கப்படுகிறான் சன் ஊ. தொடர்ந்த சம்பவங்களும் கதையை வேறு தளத்தை நோக்கி இழுத்துச்செல்கிறது.
சன் ஊ-வை கடத்தியது யார்? ஏன்? அவர்களிடமிருந்து சன் ஊ வால் தப்பிக்க முடிந்ததா? என்பவை வெண்திரையில்(?)
கேட்பதற்கு மிக எளிமையாக இருக்கும் இந்த கதை அதை எடுத்த விதத்தில் மாறுபடுகிறது. கொரிய படங்களைப்போல் , பழி வாங்கும் கதைகளை வேறு எந்த மொழியாவது இவ்வளவு சிறப்பாக கையாண்டு இருக்குமா என்பது சந்தேகமே..!! உலக திரைப்பட ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான vengeance trilogy வகைப்படங்களும் இம்மொழிப்படங்களே என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை.  நாம் பிற இணைய பதிவுகளில் அதிகம் பார்த்த the quiet family, a tale of two sisters , the good bad weird படங்களை எடுத்த kim jee woon இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். Kim jee woon எனக்கு மிகவும் பிடித்த கொரிய இயக்குனர். அவரது ஒவ்வொரு படங்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்டு, சிறப்பான அனுபவத்தை தரக்கூடியவை. குறிப்பாக, இந்தப்படமும் அந்த வரிசையில். வருவது தான். ட்விஸ்ட், திடீர் திருப்பம், நான்- லீனேயர் என எதுவும் இல்லாமல் நேர்கோட்டில் பயணிக்கும் இந்தப்படம் முடியும் போது ஒரு நெஞ்சை தொடும் அனுபவத்தை தருகிறது. அதற்கு இசையும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. மேலும் படத்தின் முக்கிய திருப்பத்திற்கு இசையே பிரதான புள்ளியாக அமைவதால் இசை மிகச்சரியாகப்பயன்படுத்தப்பட்டு, படம் முழுவதும் ஒரு மெல்லிய சோகம் இழையோடுகிறது.
எல்லா கொரிய திரைப்படங்களிலும் இசைக்கு ஒரு முக்கிய இடம் இருக்கும் . அது காதல் படமாக இருந்தாலும் சரி, கொத்து கறி போடும் வன்முறைப்படமாக இருந்தாலும் சரி…. குறிப்பாக வயலினையும், பியானோவையும் அவர்கள் பயன்படுத்தும் விதமே அலாதியானது. அதிலும் ஏறக்குறைய எல்லா கொரிய படத்திலும், திரையில் கொடூரமான வன்முறை காட்சி ஓடிக்கொண்டு இருக்கும் போதும் கூட பிண்ணனியில் மெல்லிய வயலினோ பியானோ-வோ கேட்பது எதோ ரொமாண்டிக் படங்கள் அல்லது மெலோடிராமாக்களை நினைவூட்டினாலும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை தருவதை மறுப்பதிற்கில்லை. இதே பிண்ணணி இசை முறையை பின்பற்றி பின்னாட்களில் எறக்குறைய அனைத்து மொழிகளிலும் பல படங்கள் வந்தன. தமிழில் கூட மிஷ்கின் படங்களில் இதன் பாதிப்பை பார்க்க முடியும். இந்தப்படமும் அதே பட்டியலில் வந்த போதும் அதையும் தாண்டி இயக்கம், கலை, ஒளிப்பதிவு , நடிப்பு போன்ற பல விஷயங்கள் இந்தப்படத்தை ஒரு மறக்க முடியாத படமாக மாற்றுகின்றன . குறிப்பாக சன் ஊ-வாக நடித்த byung hun , ஓவர் ஆக்டிங் இல்லாத இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். படத்தில் மொத்தமே ஒரு முறை தான் சிரிக்கிறார்.
நல்ல ஒளிப்பதிவும் இயக்கமும் சாதாரண கதையைக்கூட பார்க்க சிறப்பானதொன்றாக மாற்றி விடும் என்பதற்கு இந்தப்படமும் ஒரு உதாரணம். படத்தின் ஆரம்பத்தை போலவே முடிவிலும் ஒரு புத்த துறவியின் பலிக்காத ஒரு கனவைப்பற்றிய புத்த கதை வருகிறது. அதுவும் சன் ஊ-ன் கனவாகவே இருக்கலாம். மொத்ததில் உலக திரைப்பட விரும்பிகள் தவற விடக்கூடாத படம் இந்த A BITTERSWEET LIFE…..
பின்குறிப்பு- இதே படத்தை தழுவி ஹிந்தியில் awaarpaan என்ற படம் எடுக்கப்பட்டு அது ஹிட் அடித்தது தனிக்கதை…..

No comments:

Post a Comment