A TALE OF TWIST
(முக்கிய குறிப்பு : கட்டுரையில் ஆங்காங்கே காணொளி இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தும், அந்தந்த படத்தைப் பார்த்த வாசகர்களுக்காக மட்டும்... ஒருவேளை சம்பந்தப்பட்ட படத்தைப்பார்க்கவில்லையென்றால் , காணொளி இணைப்பை தவிர்த்து விட்டு , தொடர்ந்து வாசிக்கவும்.)
ஒவ்வொருவரும் நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ ட்விஸ்டை ரசிக்கிறோம். அது ஜோக், சிறுகதை, புதினம், திரைப்படம், என அது எந்த வகையில் இருந்தாலும்…. அதிலும் குறிப்பாக திரைப்படத்தில், இசை, காட்சியமைப்பு, நடிப்பு போன்றவற்றால் இந்த ட்விஸ்ட்’ன் த்ரில் பார்வையாளர்களை முழுமையாக சென்றடையும் வாய்ப்புகள் மிக அதிகம். எனவே நமக்கு நன்கு பழக்கமான திரைப்படத்தில் இந்த ட்விஸ்ட்’ஐ எப்படியெல்லாம் கையாள்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
ட்விஸ்ட் என்றால் என்ன?
நான் ராமசாமி’னு நெனச்சியா? நான் தான் குப்புசாமி!! போன்ற அபத்தமான ட்விஸ்ட்’டாக இல்லாமல், வழக்கமான கதையை கொண்ட படம் போலவே, எந்த சந்தேகத்தையும் கிளப்பாமல் செல்லும். படம் பார்க்கும் நாமும் கதை இப்படித்தான் போகும் என யூகித்து வைத்து இருப்போம். ஆனால், கடைசி பத்து நிமிடங்களில் வரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ட்விஸ்ட்’களால் படத்தின் மொத்த கதையுமே புரட்டி போட்டு புதிதாக மாறும் போது (shutter island, sixth sense), அதைப்பார்க்கும் நமது அட்ரீனல், பிட்யூட்டரி என சகல சுரப்பிகளும் கலந்து காக்டெய்லாக மாறிய ரத்தம் அப்படியே தலையில் ஏறுமே அது தான், அந்த உணர்ச்சி தான். அதற்கு அடிமையாகி அவ்வகை ட்விஸ்டட் படங்களை தேடித்தேடிப் பார்த்திருக்கிறேன். பார்த்துக்கொண்டு இருக்கிறேன். பெரும்பாலும் இவ்வகை ட்விஸ்டட் படங்களை ஹாலிவுட்’ல் தான் அதிகம் வெளிவந்தாலும், அரிதாக அங்கொன்றும், இங்கொன்றுமாக பிறமொழிகளிலும் வெளியாகி இருக்கின்றன.
ட்விஸ்ட் வருவதன் நோக்கமே பார்வையாளனிடம் ஆச்சர்யத்தை அளிப்பதற்குத்தான் (prestige, shutter island, fight club) சில சமயம் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தைக்கூட அளிக்கலாம் (sixth sense, psycho, old boy). ஆனால் அதன் நோக்கம் ஒன்றுதான். பார்வையாளனைக் கவர்வது.
ஒரு படத்தில் ஆங்காங்கே சின்னச்சின்ன ட்விஸ்ட் இருந்தாலும், பட இறுதியில் வரும் ட்விஸ்டே பார்வையாளன் மனதில் தங்கும், எனவே அதனை சிறப்பாகக்கட்டமைத்தல் மிக முக்கியம். எனவே இவ்வகை படத்தில் பார்வையாளனுக்கு காட்டப்படும் ஒவ்வொரு காட்சியும் அந்த இறுதி ட்விஸ்டை மனதில் கொண்டே அமைந்திருப்பதைக்காணலாம்.
உதாரணமாக, FOLLOWING, படத்தின் நீளம் மொத்தமே 67 நிமிடங்கள்தான் . ஆனால், ஐம்பது நிமிடங்கள் வரை படம் சாதாரணமான படம் போலவே எந்த திருப்பமுமில்லாமல் செல்லும். சொல்லப்போனல் கொஞ்சம் போர் அடிக்கும். முதன்முறை இந்தப்படத்தைப் பார்த்த எனக்கும், 45 நிமிடங்கள் முடிந்த பிறகு, ட்விஸ்டின் அறிகுறிகள் தென்பட்டாலும், இதற்கு பிறகு என்னதான் ட்விஸ்ட் வந்தாலும், அது படத்தை மாற்றுமா? தேறாது..!! என்றே நினைத்துக்கொண்டு படத்தை பார்த்துக்கொண்டு இருந்தேன் . ஆனால் நடந்ததோ வேறு…!!! முன்பு சொன்ன அந்த காக்டெய்ல் மேட்டர்’ அங்கு நடந்தது. கடைசி பத்து நிமிடத்தில் வந்த அந்த ட்விஸ்டும், அதன் பிறகு வந்த ட்விஸ்டுக்கே ட்விஸ்டும், இயக்குனர் நோலனுக்கு சபாஷ்’ போட வைத்தது. முதலில் பார்க்கும் போது படத்திற்கு தேவையில்லாதது என நினைத்த பல காட்சிகள் இரண்டாவது தடவை பார்க்கும் போதுதான் அதன் முக்கியத்துவம் தெரிவது அட்டகாசம். அதற்காகவே பல ரிப்பீட்டட் ரசிகர்கள் இழுப்பதால் இம்முறை திரைக்கதையின் அமைப்பின் ஒரு முக்கிய அம்சம்.
பொதுவாக, ட்விஸ்டட் படங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்,
1. ட்விஸ்ட்’ஐ எதிர்பார்த்து பார்க்கும் படங்கள்,
2. ட்விஸ்டை எதிர்பார்க்காமலேயே, அதாவது ட்விஸ்ட் இருப்பது தெரியாமலேயே பார்க்கும் படங்கள்.
முதல் வகைப்படங்கள் சாதாரணமாக நமக்குத்தெரிந்த வகை, அதாவது, ஒரு கொலை நடக்கிறது. செய்தவர் யார் என ஆராயும் டிடெக்டிவ் வகை படங்கள் (scream, I know what u did the last summer). படம் பார்க்கும் எல்லோருமே டிடெக்டிவ்’வாக மாறி, தியேட்டர் ஆப்பரேட்டர் முதற்கொண்டு இவனா? அவனா? என எல்லா கதாபாத்திரங்களையும் சந்தேகப்பட்டு, முடிந்தால் கண்டுபிடித்து, முடியாவிட்டால், அப்பவே நெனச்சேன் என்று இறுதியில் சமாளித்து, பார்க்கும் படங்கள். இவ்வகை படங்களில் ட்விஸ்ட் வரும் என்று தெரிந்த போதும், அது யார் அந்த குற்றத்தை செய்தவர் என்ற நிலையுடன் நின்று விடும். பட இறுதியில் யாரோ ஒருவரைக்காட்டி, ‘இவர் தான் கொலையாளி’ என்றால் முடிந்தது. இதனை ஒரு முறை பார்த்தால் அதன் பிறகு பார்க்க கூட்டம் இருக்காது. திறமையான திரைக்கதையும், இயக்கமும் இல்லையெனில் இவ்வகைப் படங்கள் தேறுவது மிக கடினம். மேலும், படத்தை பார்க்கும் பல பேர் வாயிலேயே ஸ்பாய்லரை வேறு வைத்துக்கொண்டு அலைவதால், படம் பார்க்காத பலரையும் பார்க்காமல் செய்யும் வாய்ப்புக்கள் அதிகம்.
கீழே scream பட ட்விஸ்ட்... (இது ஒண்ணும் அவ்ளோ பெரிய ட்விஸ்ட் கெடயாது..ஆவ்வ்வ்....)
இதே முறையிலும் ட்விஸ்ட் வரப்போவது தெரிந்து பார்க்கும் போதும் , அது பார்வையாளன் சற்றும் எதிர்பார்க்காமல் அமையும் ட்விஸ்ட்’டாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அது வெற்றியடைவது சாத்தியம் (seven)
இதோ seven படத்தின் ட்விஸ்ட் , லொக்கேஷனையும், இசையையும் கவனியுங்கள்.
ஆனால் இரண்டாம் வகைப் படங்களின் (திரைக்) கதையே வேறு…!! படம் அது ஒரு கதையில் பயணித்துக்கொண்டு இருக்கும், நாமும் படத்துடன் ஒன்றியிருப்போம். வலிமையான பல காட்சிகளால் முதல், இடை, கடை என மூன்று அங்கங்களும் அமைக்கப்பட்டு இருக்கும். படத்தில் கையாளப்படும் முக்கிய பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வந்து படம் முடிந்தது எனக்கருதும் போது, அந்த சமயத்தில் ஒரு ட்விஸ்ட் வரும். இப்போது இந்த இடத்தில் ட்விஸ்டை நாம் எதிர்பார்த்து இருக்கவே மாட்டோம். இந்த ட்விஸ்டுக்குத்தான் வீச்சு அதிகம். உதாரணத்திற்கு the sixth sense , இந்தப்படத்தில் முக்கிய பிரச்சனை அந்த சிறுவனுக்கு உள்ள குறைபாடு. ஆனால் அந்த பிரச்சினை தீர்க்கப்பட்டதோடு படம் முடிந்தது என எழும் போது தான் அந்த ட்விஸ்ட் வெளியாகிறது. இப்போது வரும் இந்த ட்விஸ்ட் வலிந்து திணிக்கப்பட்டதாக இல்லாமல் இருப்பதால், இதன் வீச்சும் அதிகம். ஆனால் இந்த வகை ட்விஸ்ட்’களுக்கு ஸ்பாய்லர்கள் ஆங்காங்கே கொடுக்கப்பட்டே இருக்கும், ஆனால் அது நம் கண்ணில் படாமல், அப்படியே பட்டாலும் உறுத்தாமல் திறமையாகக்கையாளப்பட்டு இருக்கும். இரண்டாவது முறை பார்க்கும் போது தான் அது கண்ணில் படும்.
கீழே இருப்பது sixth sense படத்தின் ட்விஸ்ட் வெளிவரும் இறுதி இடம்,
முழுப்படத்திற்குமே ட்விஸ்ட் அச்சாணியாக இருக்கும் பட்சத்தில், அந்த ட்விஸ்டை வெளிப்படுத்தும் இடம் எப்படி இருக்க வேண்டும்? ஒரு திறமையான இயக்குனர் அதனை கவனமாகவும், புத்திசாலித்தனமாகவும் கையாள்வார். குறிப்பாக, ஹிட்ச்காக், டேவிட் ஃபின்ச்சர், மனோஜ் நைட் சியாமளன்(சில படங்களில் சொதப்பினாலும்) போன்றோர்.
ட்விஸ்டை வெறும் வசன நடையாக வெளிப்படுத்துவது ஒரு பாணி என்றால் (sherlock holms, uninvited) அதனை காட்சியாக சொல்வது ஒரு தனி வகை (old boy,) மாண்டேஜ் ‘ஆக சொல்வதும் குறிப்பிடத்தக்க வழியே (Illusionist)… (usual suspects படத்தில் உடல்மொழி மூலம் ட்விஸ்ட்’ஐ வெளிப்படுத்தி இருப்பர்)
usual suspect’ன் ட்விஸ்ட்’ஐ இங்கே காணுங்கள், எனக்குத்தெரிந்து , ட்விஸ்ட்’ஐ படு ஸ்டைலாக சொன்ன படம் இது தான்.....best revealation....
இன்னும் எனக்குத்தெரியாத நிறைய வகைகள் இதில் இருந்தாலும், என்னைப்பொறுத்தவரை மேலே மூன்றாவதாகக் குறிப்பிட்ட அந்த மாண்டேஜ் வகைக்குத்தான் முதலிடம்.
பட இறுதியில் அந்த குறிப்பிட்ட ட்விஸ்ட் வெளியானவுடன் ஏற்கனவே நாம் பார்த்த காட்சிகளும், வசனங்களும், வாய்ஸ் ஓவரின் ஊடே மாண்டேஜஸ்’ஸாக மீண்டும் காட்டப்படும் போது , இப்போது அவை படத்தை புதிதாக வேறு கோணத்தில் மாற்றி, அந்த முக்கிய கதாபாத்திரம் முன்னர் செய்த செயல்கள் யாவும் வேறு அர்த்தத்துடன் தோன்றி பார்ப்போரை அசரடிப்பதை காணலாம் (kahaani, illusionist).
கீழ்காணும் ஆரண்யகாண்டம் காணொளியில் 3:55 லிருந்து கவனியுங்கள்,
இதோ illusionist பட இறுதிக்காட்சி, இதை 2:50 லிருந்து கவனியுங்கள்,
தமிழ்ப்படங்களில் இதுவரை இவ்வகை சரிவரப்பயன்படுத்தப்படாமல் இருந்தாலும், தற்போது புதிய தலைமுறை இயக்குனர்கள் இப்போது தான் இதனை கையில் எடுத்துள்ளது போல் தெரிகிறது. (ஆரண்ய காண்டம், பீட்ஸா, அயன், கோ). இனி வருங்காலத்தில் இதை பெரிய அளவில் எடுத்துச்செல்வார்கள் என நம்புவோம்.